நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. வரையிலான மழை

நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. வரையிலான மழைவீழ்ச்சி

by Staff Writer 09-08-2020 | 10:40 AM
Colombo (News 1st) சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்தில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரை மற்றும் மாத்தறையிலிருந்து மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரை காற்று வீசும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களின் காற்றின் வேகம் இடைக்கிடையே 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களும் கடற்சார் ஊழியர்களும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் மலையகப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று (09) காலை வீசிய பலத்த காற்றினால் டயகம போடைஸ் ஊடாக ஹற்றன் செல்லும் பாதையில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் காலை வேளையில் குறித்த பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் கூறினர். இதேவேளை, நுவரெலியா - நானுஓயா பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக மண்மேடு இடிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் உறவினர்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளனர். தம்பகஸ்தலாவ தோட்டத்தில் சுமார் 40 அடி உயரத்திலுள்ள மண்மேடு, குடியிருப்பின் மீது இடிந்து வீழ்ந்துள்ளது. இதில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறித்த இரண்டு வீடுகளினதும் சுவர்கள் இடிந்துள்ளதுடன் பொருட்களுக்கும் சேதமேற்பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் வாழ்ந்த 17 பேர் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். இதேநேரம், அக்கரப்பத்தனை - நல்லத்தண்ணி தோட்டத்தில் 25 தனி வீடுகள் அமைந்துள்ள பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ளது. அந்த பகுதியில் வசித்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர்.