தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் கட்சிக்குள் கருத்து முரண்பாடு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் கட்சிக்குள் கருத்து முரண்பாடு

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2020 | 8:46 pm

Colombo (News 1st) பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் மீண்டும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

கூட்டமைப்பிற்குக் கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பதில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் 9 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது.

அந்த ஆசனம் யாருக்கு வழங்கப்படும் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

கட்சியின் உயர்மட்டக்குழு கூடி அதனைத் தீர்மானிக்கும் எனவும் மாவை சேனாதிராசா நியூஸ்ஃபெஸ்டிற்குக் கூறினார்.

எவ்வாறாயினும், கட்சியின் உயர்மட்டக்குழு கூடும் திகதியும் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் வினவுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கத்தை தொடர்பு கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதேவேளை, இம்முறை பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் திருகோணமலை மற்றும் அம்பாறையில் போட்டியிட்ட சில வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதிகள் இல்லை என்பதால், அதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்