அங்கொட லொக்கா மரண வழக்கு: கைதானோரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரல்

அங்கொட லொக்கா மரண வழக்கு: கைதானோரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரல்

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2020 | 6:10 pm

Colombo (News 1st) அங்கொட லொக்கா மரண வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளோரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதியளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அங்கொட லொக்கா மரணம் தொடர்பில் 27 வயதான அமானி தான்ஜி , 36 வயதான சட்டத்தரணி சிவகாமி சுந்தரி மற்றும் எஸ்.தியாகேஷ்வரன் ஆகிய மூவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் தியாகேஸ்வரனும் சிவகாமி சுந்தரி என்ற சட்டத்தரணியும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

27 வயதான அமானி தான்ஜி என்ற பெண் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்று கோயம்புத்தூர் சேரன்மாநகரில் அங்கொட லொக்காவுடன் வசித்து வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி பிரதீப் சிங் என அடையாளத்தைக் கொண்டிருந்த அங்கொட லொக்கா, நெஞ்சு வலி காரணமாக கோயம்புத்தூரில் வைத்தியசாலையொன்றில் குறித்த பெண்ணால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மயக்க நிலையில் இருந்த லொக்கா அவ்வாறே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் 07 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு இந்திய மத்திய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கோரப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான விசாரணைகளை இந்திய மத்திய குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வரும் நிலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் 07 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், சம்பவம் தொடர்பில் மரணம் தொடர்பான வழக்கும் போலி ஆவணங்களை பயன்படுத்தி தங்கியிருந்ததாகக் குற்றஞ்சாட்டி மற்றொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனு தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை தீர்மானம் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் உண்மையிலேயே அங்கொட லொக்காவா என்பது தொடர்பிலும் குறித்த மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பிலும் இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்