பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆசனங்கள் உள்ளன

பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆசனங்கள் உள்ளன: ஜீ.எல். பீரிஸ்

by Bella Dalima 07-08-2020 | 9:12 PM
Colombo (News 1st) புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பது மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கருத்து வெளியிட்டார். 22 தேர்தல் மாவட்டங்களில் 19-இல் தம்மால் வெற்றி பெற முடிந்ததாகக் குறிப்பிட்ட பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இதற்கு பசில் ராஜபக்ஸவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். COVID-19 தொற்றுக் கட்டுப்பாடு, பாதாள உலகக் கோஷ்டியைக் கட்டுப்படுத்தல், போதைவஸ்த்தைத் தடுக்கும் பலம் வாய்ந்த வேலைத் திட்டம் ஆகியவற்றினால் கோட்டாபய ராஜபக்ஸவின் பலம் மக்களுக்குப் புரிந்துள்ளதாக ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார். ஆகஸ்ட் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது 2/3 பெரும்பான்மை அதிகாரமும் அரசியலமைப்பை மறுசீரமைக்கும் அதிகாரமும் புதிய அரசாங்கத்திடம் இருக்கும் என அவர் மேலும் கூறினார். டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், அதாவுல்லா, பிள்ளையான் போன்றோரின் கட்சிகள் தம்முடன் இணைந்து பணியாற்றும் கட்சிகள் என்பதால், புதிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 150-இற்கும் அதிக ஆசனங்கள் தமது கட்சியிடம் இருப்பதாக ஜீ.எல். பீரிஸ் குறிப்பிட்டார். இதேவேளை, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜீ.எல். பீரிஸ் பின்வருமாறு கருத்துக் கூறினார்.
சிற்சில மறுசீரமைப்புகள் அவசியம் என்பது தெளிவாகப் புரிகின்றது. ஆணைக்குழுக்களின் தன்மைகளை மாற்ற வேண்டியது அவசியமாகும். கடந்த காலத்தில் ரணிலும் சுமந்திரனும் எதனைக் கூறினார்கள்? காலாவதியான பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கூறினார்கள். அவ்வாறு கூட்டாமல் இருப்பது சட்டவிரோதமானது என்றனர். அந்த பாராளுமன்றம் எந்த வகையிலும் மக்கள் ஆணையைப் பெறாதது என்பது தற்போது தெளிவாகப் புரிகின்றது. பாராளுமன்றத்தை எந்தத் தருணத்திலும் கலைப்பதற்கு ஜனாதிபதியிடம் அதிகாரம் இருக்க வேண்டும். 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் காரணமாகவே அதனை செய்ய முடியாமல் போனது