புதிய பிரதமராக மஹிந்த நாளை மறுதினம் பதவியேற்கிறார்

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் பதவியேற்கிறார் 

by Staff Writer 07-08-2020 | 2:40 PM
Colombo (News 1st) மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 9 ஆம் திகதி புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு வைபவம் நாளை மறுதினம் (09) காலை 8.30-க்கு களனி ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ளது. இம்முறை பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஸ, 5 ,00,364 வாக்குகளைப் பெற்றார். இதனடிப்படையில், 11 ஆசனங்களைக் கைப்பற்றிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விருப்பு வாக்குகளின் பட்டியலில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையிலுள்ளார். இந்நிலையில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த வெற்றி முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார். சவால்களுக்கு மத்தியிலேயே மகத்தான வெற்றிகள் உதயமாவதாக பிரதமர் விடுத்துள்ள அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது நம்பிக்கை வைத்து, வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்த அனவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார். COVID-19 தொற்றினால் முழு உலகமும் செயலிழந்துள்ள நிலையில், மக்கள் மீது நம்பிக்கை வைத்தே இந்த தேர்தல் நடத்தப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி நாட்டிற்குக் கிடைத்த வெற்றி எனவும் பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 71 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்ததன் மூலம் கடினமான சூழலிலும் ஜனநாயகத்திற்காக மக்கள் முன்வந்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைய வேண்டியுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.