தேர்தல் வெற்றிக்கு இந்தியா, அமெரிக்கா வாழ்த்து

தேர்தல் வெற்றிக்கு இந்தியா, அமெரிக்கா வாழ்த்து

by Bella Dalima 07-08-2020 | 9:31 PM
Colombo (News 1st) தேர்தல் வெற்றிக்காக பல நாடுகளும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு தொலைபேசியூடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸ, இலங்கை மக்களின் வலுவான ஒத்துழைப்புடன் பிரதமர் நரேந்திர மோடியுடனான தொடர்பை தொடர்ச்சியாக முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார். இரண்டு நாடுகளுக்குமிடையில் நட்பும், உறவு முறையும் உள்ளதென மஹிந்த ராஜபக்ஸ தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மற்றும் புதிய பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கொரோனா தொற்றுடன் விடுக்கபட்ட சவாலுக்கு மத்தியில் அமைதியாகவும் திட்டமிட்ட வகையிலும் தேர்தலை நடத்திய இலங்கைக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்றம் கூடியதும் சகலரையும் இணைத்துக்கொண்டு பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வரும் செயற்பாட்டை கட்டியெழுப்புதல், மனித உரிமைகள், சட்டத்தின் இறைமையை நடைமுறைப்படுத்துதல் என்பன அரசாங்கத்தால் புதுப்பிக்கப்படும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும். நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பும் அதனுன் அடங்குவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூவராலயம் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.