தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்

by Bella Dalima 07-08-2020 | 9:23 PM
Colombo (News 1st) கடந்த பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் பலர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனும் தனது பாராளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனும் இம்முறை தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இலங்கை தமிழசுக் கட்சி சார்பில் வன்னியில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா மற்றும் எஸ். சிவமோகனும் தோல்வியடைந்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வௌியேறி இம்முறை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் பாராளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்தன் கோடீஸ்வரன், திகாமடுல்ல மாவட்டத்தில் மக்கள் ஆணையைப் பெறத் தவறியுள்ளார். இதே மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் நசீர், எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோரும் தோல்வியடைந்தனர். தேசிய காங்கிரஸில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.மொஹமட் இஸ்மாயிலும் மீண்டும் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்தார். மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஶ்ரீநேசனும் சீனித்தம்பி யோகோஸ்வரனும் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவும் இம்முறை தோல்வியடைந்தார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப்பும் திருகோணமலையில் தனது ஆசனத்தை இழந்தார்.