சசிகலா ரவிராஜின் வாக்குகளை சூறையாடினாரா சுமந்திரன்?

by Bella Dalima 07-08-2020 | 9:09 PM
Colombo (News 1st) யாழ். மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வாக்கெண்னும் நிலையத்திற்கு அருகே நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டது. யாழ். தேர்தல் மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் அமைதியற்ற சூழல் நிலவியது. யாழ். மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். எம்.கே.சிவாஜிலிங்கம் ,சி.தவராசா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சித்தார்த்தனுடன் கலந்துரையாடினர். இதன்போது, அங்கு நின்ற சிலரினால் சிவாஜிலிங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுடன் கலந்துரையாடியதன் பின்னர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அங்கிருந்து வௌியேறினார். அதன் பின்னர் அங்கு கூடியிருந்த மக்களை அங்கிருந்து வௌியேறுமாறு பொலிஸார் அறிவித்தனர். சற்று நேரத்தின் பின்னர் தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா அங்கு வருகை தந்திருந்தார். முடிவுகள் வந்த பிறகு ஏதேனும் தவறுகள் அதில் காணப்படுமாயின் யாழ்ப்பாணத்தில் குழப்ப நிலை உருவாகும் என என்.சிறிகாந்தா குறிப்பிட்டார். இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு வருகை தந்தபோது அங்கிருந்த பலர் கோஷம் எழுப்பினர். எவ்வாறாயினும், பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன் எம்.ஏ.சுமந்திரன் வாக்கெண்ணும் நிலையத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மற்றுமொரு வேட்பாளரான சசிகலா ரவிராஜ் வாக்கெண்ணும் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வந்திருந்தார். எனினும், சற்று நேரத்தின் பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறினார். சிறிது நேரத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து எம்.ஏ. சுமந்திரன் அனுப்பி வைக்கப்பட்டார். இவ்விடயம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்
எனது தொகுதி முகவர்கள் அமைப்பாளர் கணக்கீட்டின் படி நான் இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது. அது பல்வேறுபட்டவர்களினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு நான் காத்திருந்தேன். ஒரு மணி வரை நான் கேட்டேன். இருந்தாலும் அவர்கள் கால தாமதப்படுத்திக்கொண்டிருந்தார்கள். இறுதியில் நான்காவதாக அறிவிக்கப்பட்டது. இது எப்படி இடம்பெற்றது என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் STF குழுவினரால் எனது ஆதரவாளர்களுக்கு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. உள்ளே வர முடியாது என்றார்கள். பின்பக்கத்தினால் தான் வர முடியும் என்றார்கள். பொலிஸ் அதிகாரிகள் என்னை உள்ளே விடவில்லை. ஆனால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அவரின் உதவியாளர்களும் உள்ளே இருந்தார்கள். அதனைப்பற்றி நான் வினவினேன். அவர்கள் ஒன்றும் கூறவில்லை.
சசிகலா ரவிராஜின் குற்றச்சாட்டிற்கு எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு பதிலளித்தார்
அவருக்கு யார் சொன்னார்களோ தெரியவில்லை அவருடைய ஆசனத்தை நான் திருடிவிட்டதாக. திரு. சித்தார்த்தன் ஆசனத்தை திருடிவிட்டதாகச் சொன்னால் கூட நூறு வாக்குகள் தான் வித்தியாசம். அது கூட நடக்காது. நான்காயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இருந்த நான், அவருடைய ஆசனத்தை திருடிவிட்டதாக அவர் சொல்லியுள்ளார். முதல் தடவையாக தேர்தலில் போட்டியிடும் பெண்மணி. அவரின் செயற்பாடுகளை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அவருக்கு கூட இருந்தவர்கள் இது சாத்தியம் அற்றது என்பதனை சொல்லியிருக்க வேண்டும். மனமுடைந்தது விளங்குகின்றது. அதனால் நானும் கவலையடைகின்றேன்.தேர்தல் வாக்குகளை சூறையாட முடியாது.
இதேவேளை, இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள ரவிராஜின் உருவச் சிலைக்கு அவரது ஆதரவாளர்கள் கறுப்பு மற்றும் சிவப்பு துணிகளைப் போர்த்தினர். இதன்போது அமரர் நடராஜா ரவிராஜின் உருவச் சிலையை மூடிய ஆதரவாளர்கள், தேங்காய் உடைத்ததுடன் அங்கிருந்த மலர்ச்சாடிகளையும் நிலத்தில் அடித்தனர். யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட அமரர் நடராஜா ரவிராஜின் பாரியார் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களின் விருப்பு வாக்குப் பட்டியில் 23,098 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்தே இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.