ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

by Bella Dalima 07-08-2020 | 5:10 PM
Colombo (News 1st)  ஏப்ரல் 21 தாக்குதலுக்கு நிதியுதவி வழங்கி ஒத்துழைத்ததாக குற்றம் சுமத்தி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தம்மை கைது செய்ய எடுத்துள்ள முயற்சியைத் தடுத்து இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. புவனேக அளுவிகாரே, எல். டீ. பி. தெஹிதெனிய மற்றும் எஸ். துரைராஜா உள்ளிட்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப்பிரிவினால் நூற்றுக்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுவதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மெரின் புள்ளே இதன்போது தெரிவித்துள்ளார். மனுதாரரான முன்னாள் அமைச்சர் கைது செய்யப்படுவாராயின், அது அவருக்கு எதிரான சாட்சிகளை அடிப்படையாக வைத்து சட்டரீதியாக மாத்திரமே இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகளவானவர்கள் காயமடைந்த, பலரது உயிர்கள் காவுகொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை சிக்கல் மிக்கதென சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவராக தம்மை கைது செய்வதை தடுக்குமாறு இடைக்கால தடையுத்தரவு கோரி நீதிமன்றத்தை நாடுவது அடுத்த கட்ட விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் குழாம், ரிஷாட் பதியுதீனின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளிக்காமல் நிராகரித்தது.