by Bella Dalima 07-08-2020 | 6:07 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் நாளொன்றில் அதிகளவில் கொரோனா நோயாளர்கள் பதிவாகும் நாடுகளில் இந்தியா முதலாவதாகவுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக நாளொன்றில் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துவரும் நிலையில், நேற்று (06) ஒருநாளில் 62,538 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்தியாவில் நாளொன்றில் பதிவாகிய மிக அதிகமான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இந்த அதிகரிப்பையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தைக் கடந்து 21 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளமையை இந்திய மத்திய சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் 886 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததையடுத்து, மொத்த மரணங்களின் எண்ணிக்கை 41,585 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், 6,07,384 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 13,78,105 ஆக பதிவாகியுள்ளது.
இதனடிப்படையில், தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கையை விடவும் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமையை இந்திய மத்திய சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் டெல்லி , மகாராஷ்ட்ரா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களிலேயே அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.