பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி: ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி

பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி: ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி

எழுத்தாளர் Bella Dalima

07 Aug, 2020 | 9:47 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தெரிவு செய்யப்பட்ட 128 உறுப்பினர்களுடன் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் 17 பேர் அடங்கலாக 145 பேர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு 150 ஆசனங்கள் தேவை.

பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு மேலும் 5 ஆசனங்களே தேவையாகவுள்ளன.

நான்கு கட்சிகள் பொதுஜன பெரமுனவுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், 5 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் ஒரு ஆசனத்தையும் டக்ளஸ் தேவானந்தாவின் EPDP கட்சி இரண்டு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு ஆசனத்தையும் தேசிய காங்கிரஸின் ஏ.எல்.எம். அதாவுல்லா ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த ஐந்து உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இலகுவில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மாவட்ட ரீதியில் எடுத்துக்கொண்டால் ஹம்பாந்தோட்டை, காலி , மாத்தறை , களுத்துறை, இரத்தினபுரி ,கேகாலை , குருநாகல் , கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை , மொனராகலை , பதுளை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்த வகையில், பெரமுன நாடு முழுவதும் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 68,53,693 ஆகும். இது 59.89 வீதமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தி 27,71,984 வாக்குகளைப் பெற்று 54 ஆசனங்களை சுவீகரித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி 23.90 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இம்முறை 3,27,168 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. இது 2.82 வீதமாகும்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இருந்து ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் அடங்கலாக 10 பேர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி 4,45,958 வாக்குகளைப் பெற்று ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் அடங்கலாக மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. குறித்த கட்சி 3.84 வாக்கு வீதத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 66,579 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியால் இம்முறை மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், தேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதிலும் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 2,49,435 ஆகும். இது 2.15 வீதமாகும்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தேசியப் பட்டியல் ஆசனம் அடங்கலாக இரண்டு ஆசனங்களை சுவீகரித்துள்ளது.

61,464 வாக்குகளைப் பெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

முதற்தடவையாக தேர்தலில் போட்டியிட்ட எமது மக்கள் சக்தி கட்சி 67,758 வாக்குகளைப் பெற்று தேசியப் பட்டியல் ஆசனமொன்றைப் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என அறியப்படும் TMVP கட்சி ஒரு ஆசனத்தை வெற்றி கொண்டுள்ளதுடன், 67,692 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இதனைத் தவிர, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,
தேசிய காங்கிரஸ் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்