பெய்ரூட் : துறைமுக அதிகாரிகளுக்கு வீட்டுக்காவல்

பெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: துறைமுக அதிகாரிகளுக்கு வீட்டுக்காவல்

by Chandrasekaram Chandravadani 06-08-2020 | 7:48 AM
​Colombo (News 1st) லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்புச் சம்பவம் தொடர்பில், பெருமளவான துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லெபனான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளதுடன், 4000 பேர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 2 வார அவசரகாலநிலை நடைமுறைக்கு வந்துள்ளது. 2,750 தொன் அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமையே, வெடிப்பு ஏற்பட காரணமென லெபனான் ஜனாதிபதி Michel Aoun தெரிவித்துள்ளார். குறித்த இரசாயனத்தை அங்கிருந்து அகற்றுமாறு தமது அமைப்பு கோரியிருந்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என லெபனான் சுங்கத்தின் தலைவர் பத்ரி டாஹெர் சுட்டிக்காட்டியுள்ளார். வெடிப்புச் சம்பவத்துக்கான காரணம் என்ன என்பதனை நிபுணர்கள் கண்டறிய வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் விவசாயத்திற்கான உரமாகப் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.