பெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் உயிரிழப்பு

பெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் உயிரிழப்பு

பெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

05 Aug, 2020 | 11:41 am

Colombo (News 1st) Update: 05/08/2020 – 11.40 AM: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

————————————————————————————————————————————–

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.

சுங்கத்தினால் கைப்பற்றப்பட்டு துறைமுக களஞ்சியசாலையில் சுமார் 2,750 தொன் அமோனியம் நைட்ரேட் இரசாயனம் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாக லெபனான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த இரசாயனம் 06 வருடங்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்புச் சம்பவத்தையடுத்து லெபனான் ஜனாதிபதி Michel Aoun உயர் பாதுகாப்பு பேரவையை கூட்டியதுடன் பெய்ரூட் நகரம் பேரழிவால் பாதிக்கப்பட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துறைமுக களஞ்சியசாலையில் உரிய பாதுகாப்புடன் இரசாயனம் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி Michel Aoun கூறியுள்ளார்.

இந்தநிலையில், லெபனானில் 3 நாட்கள் துக்கதினத்தை பிரகடனப்படுத்தி அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் 66 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.

2005 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வௌியாகவிருந்த நிலையில் இந்த பாரிய வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து ஐந்து நாட்களில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்களென விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அரச தலைவர்கள் பலரும் அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு தமது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

லெபனானுக்கு ஆதரவாக பிரான்ஸ் எப்போதும் இருக்கும் என பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

லெபனானுக்குத் தேவையான உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இரு நாடுகளிடையே சிறந்த இருதரப்பு உறவுகள் காணப்படாவிடினும் லெபனானுக்குத் தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சர்வதேச பாதுகாப்பு மற்றும் அரசியல் ஊடகங்களூடாக வௌிவிவகார அமைச்சு தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பதில் பிரதமர் பென்னி கன்ஸ் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சாதகமான அனைத்து வழிகளிலும் தேவையான அனைத்து உதவிகளை வழங்கத் தயாரகவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பிரித்தானியப் பிரஜைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் அவர் தமது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, லெபனானுக்கு தேவையான மருத்துவ உதவிப் பொருட்களை வழங்குவதாக கத்தார் தெரிவித்துள்ளது.

லெபனான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் கலந்துரையாடி இது குறித்து அறிவித்துள்ளதாகவும் கத்தார் அறிவித்துள்ளது.

இதனிடையே, இதுவாரு பயங்கரமான வெடிப்புச் சம்பவமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

லெபனானுடன் சிறந்த நட்புறவு காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர், அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாரெனவும் கூறியுள்ளார்.

இந்தநிலையில், லெபனானிலுள்ள தமது நாட்டு பிரஜைகள், முகக்கவசம் அணிந்து வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு லெபனானுக்கான அமெரிக்க தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்