பொதுத்தேர்தல் 2020: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

பொதுத்தேர்தல் 2020: நாளை காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பம், அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

by Staff Writer 04-08-2020 | 8:06 PM
Colombo (News 1st) நாளை (05) காலை 7 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் 12,985 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. 166 தொகுதிகளில் இருந்து 196 பேரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்காக நாளை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முறை பொதுத்தேர்தலில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகள் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதுடன், 312 சுயேட்சைக் குழுக்களும் 2020 பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ளன. 1,62,63,885 பேர் இம்முறை தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்திலே​யே அதிகளவிலான வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அங்கு 17,85,964 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 13,48,787 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மிகக் குறைவான வாக்காளர்கள் வன்னி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 2,87,024 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.