ஷானி அபேசேகரவின் உதவியாளர் நீதிமன்றில் சாட்சியம்: நீதவானிடம் இரகசிய வாக்குமூலமளித்தார்

ஷானி அபேசேகரவின் உதவியாளர் நீதிமன்றில் சாட்சியம்: நீதவானிடம் இரகசிய வாக்குமூலமளித்தார்

ஷானி அபேசேகரவின் உதவியாளர் நீதிமன்றில் சாட்சியம்: நீதவானிடம் இரகசிய வாக்குமூலமளித்தார்

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2020 | 8:16 pm

Colombo (News 1st) பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் உதவியாளராக செயற்பட்ட உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றிய உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுகத் மோஹன மென்டிஸ் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (03) கைது செய்யப்பட்டிருந்தார்.

2014 ஆம் ஆண்டு முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்பில், துப்பாக்கிகளை அடையாளம் காட்டி, போலி சாட்சியம் வழங்கியமை தொடர்பாக உப பொலிஸ் இன்ஸ்பெக்டரான சுகத் மோஹன மென்டிஸ் என்பவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்த தமது கட்சிக்காரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் என்ற அதிகாரி அவரை அச்சுறுத்தியதாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சமிந்த அத்துகோரள இன்று மன்றில் தெரிவித்தார்.

அதற்கமைய, சந்தேகநபர் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு சட்டத்தரணி மன்றில் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து, சந்தேகநபர் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலமளித்தார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா, பொலிஸ் சார்ஜனாகக் கடமையாற்றிய சுகத் மோஹன மென்டிஸ் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் கம்பஹா – கலகெட்டிஹேன பகுதியில் வீடொன்றில் துப்பாக்கிகளை மறைத்துவைத்து பின்னர் அவற்றைக் கைப்பற்றியதுடன், குறித்த துப்பாக்கிகள் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு சொந்தமானவை என உண்மைக்கு புறம்பான விதத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மன்றில் அறிவித்துள்ளது.

மொஹம்மட் சியாமின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில் அடங்குகின்றதா என நீதவான் இதன்போது கேள்வியெழுப்பினார்.

மொஹமட் சியாமை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்த துப்பாக்கிகளில் இருக்கவில்லை எனவும் அந்த துப்பாக்கி இதுவரை பொலிஸாரால் கைபற்றப்படவில்லை எனவும் குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்