வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்லும் பணிகள் காலை 8 மணி முதல்…

வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்லும் பணிகள் காலை 8 மணி முதல்…

வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்லும் பணிகள் காலை 8 மணி முதல்…

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2020 | 7:43 am

Colombo (News 1st) பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குப் பெட்டிகளுடன் இன்று (04) காலை 8 மணி தொடக்கம் அதிகாரிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லவுள்ளனர்.

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரின் கண்காணிப்பில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் சுகாதார ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக 8,000 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகாரிகள் தங்களுக்குரிய பணி இடங்களுக்கு இன்று முதல் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், சுகாதார அத்தியட்சகர்கள், நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள், குடும்பநல சுகாதார அதிகாரிகள், நிறைவுகான் வைத்தியர்கள் அடங்கலாக சுகாதார குழுவினர் தேர்தல் காலத்தில் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தலா ஒருவர் அல்லது இருவர் வீதம் சுகாதார உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் சுகாதார ஒழுங்குவிதிகள் பேணப்படுகின்றதா என்பது தொடர்பில் மாகாண சுகாதார பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினரால் கண்காணிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தல் காலத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவைக்காக 3,000 இற்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாக்களிப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுதல், வீதித் தடைகளை இட்டு கண்காணிப்பில் ஈடுபடுதல் உள்ளிட்ட நடமாடும் பணிகளுக்காக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

12,700 இற்கும் மேற்பட்ட பொலிஸார், வாக்களிப்பு நிலைய கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்களில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும் தலா இருவர் வீதம் பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவதாக தேர்தல் கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

வாக்களிப்பு நிறைவு பெற்றதும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்களிடம் வாக்குப் பெட்டிகளை கையளிக்கும் வரை இவர்கள் கடமைக்கு பணிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குப் பெட்டிகளின் எண்ணிக்கைக்கு அமைய ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலையங்களிலும் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

வாக்கெண்ணும் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு இடப்பட்டுள்ளதாகவும் இந்த கடமைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வாக்கெண்ணும் நிலையங்களை அண்மித்த அனைத்து வீதிகளிலும் வீதித் தடைகள் இடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதாக தேர்தல் கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்