போதைப்பொருள் கடத்தல்: பொலிஸ் உத்தியோகத்தர்கள் 13 பேரின் பிணை நிராகரிப்பு

போதைப்பொருள் கடத்தல்: பொலிஸ் உத்தியோகத்தர்கள் 13 பேரின் பிணை நிராகரிப்பு

போதைப்பொருள் கடத்தல்: பொலிஸ் உத்தியோகத்தர்கள் 13 பேரின் பிணை நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2020 | 5:15 pm

Colombo (News 1st) சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை கடத்தற்காரர்களுக்கே விற்பனை செய்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள
பொலிஸ் உத்தியோகத்தர்கள் 13 பேருக்கான பிணை விண்ணப்பம் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்களான குறித்த அதிகாரிகள் 13 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ​வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், பிறிதொரு தினத்தில் சந்தேகநபர்களை மன்றில் ஆஜர்ப்படுத்துமாறு பிரதம நீதவான் சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் விசாரிக்கப்படும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சதுரங்க பிரேமசிறிக்கு சொந்தமான நான்கு வாகனங்களின் சாரதி ஆசனங்கள், டிக்கி மற்றும் மேலதிக டயர் பொருத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் போதைப்பொருள் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் இன்று மன்றில் குறிப்பிட்டார்.

சந்தேகநபர்கள் வசமிருந்து கைப்பற்றப்பட்ட மூன்றரைக் கோடிக்கும் அதிக பணத்தை வழக்கு கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்குமாறு பிரதம நீதவான் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் சான்றுப்பொருள் களஞ்சியத்தில் இருந்த அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்பட்ட ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் அடங்கிய 23 பொதிகளில் இருந்து போதைப்பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிவித்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் இதன்போது மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்