அநுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு 18 ஆம் திகதி வரை விளக்கமறியல்

அநுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு 18 ஆம் திகதி வரை விளக்கமறியல்

அநுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு 18 ஆம் திகதி வரை விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

04 Aug, 2020 | 8:57 pm

Colombo (News 1st) நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு சட்டவிரோதமான முறையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தமை, இதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட உடைமைகளுக்கு சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் தயாரித்து பட்டியலிட்டமை, தவறான வகையில் கணக்குகள் காண்பிக்கப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி தமது கட்சிக்காரருக்கு பிணை வழங்க முடியும் என பிரதான சந்தேகநபரான முன்னாள் சிறைச்சாலைகள் அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ சார்பில் ஆஜரான சட்டத்தரணி உபுல் ராஜபக்ச நீர்கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் குறிப்பிட்டார்.

சாம்பாயோ இன்னமும் குற்றவாளியாகக் காணப்படவில்லை எனவும் அவரது மனைவி பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் மகள் களனி மருத்துவப் பீடத்தில் கல்வி பயில்வதாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

இரண்டாவது சந்தேகநபரான உபாலி சரத் பண்டார சார்பிலும் அவரது சட்டத்தரணிகள் பிணை விண்ணபத்தை சமர்ப்பித்தனர்.

இரண்டாவது சந்தேகநபர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எதிராக எவ்வித சாட்சியமும் அளிக்கப்படவில்லை எனவும் சட்டத்தரணிகள் கூறினர்.

மூன்றாவது சந்தேகநபர் இருதய நோயாளி என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நான்காவது சந்தேகநபர் சார்பில் விடயங்களை முன்வைத்த அவரது சட்டத்தரணிகள், தனது கட்சிக்காரர் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு தவறான செய்திகள் வௌிவந்துள்ளதாக சுட்டிக்காட்டினர்.

ஏற்கனவே செய்த குற்றங்கள் தொடர்பில் அவருக்கு குற்றச்சாட்டு இல்லை எனவும் நீதிமன்றத்தின் உத்தரவை அறிந்தவுடனேயே அவர் சரணடைந்ததாகவும் சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தபோது குறிப்பிட்டனர்.

எவ்வாறாயினும், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் தொடர்பில் விசேட நிலைமை ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றமை தெரியவருவதாகவும் அவ்வாறு இடம்பெறுவதற்கான காரணம் என்னவெனவும் அவர் வினவினார்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகின்றபோது திடீரென முன்னிலையாகின்றமை வழமைக்கு மாறானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பதினொரு நாட்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்து வந்த அநுருத்த சம்பாயோவை திடீரென நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் குருநாகலுக்கு சென்று எவ்வாறு கைது செய்தார் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திறந்த நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு கைது செய்கின்றமை தொடர்பில் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறையாக அறிவிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டரின் குறிப்புகளை நீதிமன்றத்தில் மேற்கோள்காட்டி பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வாதங்களை முன்வைத்தார்.

புலனாய்வுப் பிரிவு நடவடிக்கையின் மூலம் முதலாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினாலும் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்புகளில் உள்ளதாக அவர் கூறினார்.

உயர் அதிகாரி ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, அநுருத்த சம்பாயோவை சந்தித்து பிடியாணை தொடர்பில் விளக்கமளித்து கைது செய்யப்பட்டதாகக் குறிப்புகளில் உள்ளதெனவும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

சம்பாயோ தமது பாடசாலையின் பழைய மாணவர் எனவும் அவர் நன்கு பரீட்சயமானவர் எனவும் அந்த சந்தர்ப்பத்தை ஔிப்பதிவு செய்வதற்கு முயற்சித்த ஒருவரை தடுத்ததாகவும் குறிப்பில் உள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

அநுருத்த சம்பாயோவின் சகோதரனையும் தாம் நன்கு அறிந்திருந்ததாகத் தெரிவித்துள்ள நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர், அவருக்கு தேநீர் விருந்தொன்றை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குறிப்புகளை மேற்கோள்காட்டி மன்றில் தமது வாதங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் , இவ்வாறான குறிப்புகள் உள்ள நிலையில், சந்தேகநபர் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டதாக எவ்வாறு கூற முடியும் என கேள்வி எழுப்பினார்.

தமது கட்சிகாரர் சரணடைந்ததாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் நேற்று அறிவித்ததாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

11 நாட்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கண்டுபிடிக்க முடியாமற்போன அநுருத்த சம்பாயோவை நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் இலகுவாக கண்டுபிடித்துள்ளதாகவும் இந்த தகவல்களில் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரினார்.

பாதுகாப்பு செயலாளர் இன்று சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு வருகை தந்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் பிரதான சந்தேகநபரின் பொறுப்பில் இருந்த விடுதியின் 2, 7, 8 ஆகிய சிறைகளில் அதி சொகுசு உபகரணங்கள் இருந்தாகவும் 41 பக்கங்கள் கொண்ட அறிக்கையொன்றை சமர்ப்பித்த திலீப பீரிஸ் கூறினார்.

நீதிமன்ற உத்தரவு ஊடகங்கள் மற்றும் ஏனைய வழிமுறைகள் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்த நிலையில், சட்டம் தொடர்பிலான புரிதல் உள்ள சிறைச்சாலைகள் அத்தியட்சகர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டமை வேண்டுமென்றே நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்கும் நடவடிக்கையாகும் என நீர்கொழும்பு பிரதம நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய குறிப்பிட்டார்.

குருநாகல் பொலிஸ் நிலையத்தில் சரணடைவதற்கான இயலுமை இருந்தும் அதனை வேண்டுமென்றே தவிர்த்தமை தெரியவருவதாக நீதவான் சுட்டிக்காட்டினார்.

ஏனைய சந்தேகநபர்களும் அதற்கு நிகரான வகையில் செயற்பட்டுள்ளதால், சந்தேகநபர்கள் அனைவருக்கும் பிணை வழங்க முடியாது என நீர்கொழும்பு பிரதம நீதவான் அறிவித்தார்.

பிணை வழங்கினால் விசாரணைக்கும் சாட்சியாளர்களுக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்படலாம் எனவும் நீதவான் தமது உத்தரவை அறிவித்து சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்