அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் கோயம்புத்தூர் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் கோயம்புத்தூர் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் கோயம்புத்தூர் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

04 Aug, 2020 | 7:35 pm

Colombo (News 1st) லசந்த சந்தன பெரேரா அல்லது ‘அங்கொட லொக்கா’ இந்தியாவில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணைகளை நடத்த 7 குழுக்களை கோயம்புத்தூர் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நியமித்துள்ளது.

இந்திய ஊடகங்களின் பிரகாரம் அங்கொட லொக்கா என்பவர் பிரதீப் சிங் எனும் பெயரில் சுமார் 2 வருடங்கள் இருந்துள்ளார்.

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் கோயம்புத்தூர் பொலிஸாரால் கோயம்புத்தூர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக The Times of India பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கொட லொக்காவின் மரணத்தின் பின்னணியில் சர்வதேச வலையமைப்பின் தொடர்பு உள்ளதா என்பதனை மட்டுப்படுத்தப்பட்ட விசாரணைகள் மூலம் கண்டறிய முடியாதென கோயம்புத்தூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, O.H.ராஜூ என அழைக்கப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி குறித்த விசாரணைகளுக்கு பொறுப்பான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக The Times of India பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லசந்த சந்தன பெரேரா அல்லது அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்ததாக The Hindu, The Times of India, The New Indian Express உட்பட தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைகள் சிலவும் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.

அங்கொட லொக்காவிற்கு பிரதீப் சிங் என்ற பெயரில் ஆதார் அட்டை எனப்படும் அடையாள அட்டையைப் பெறுவதற்கு போலி ஆவணங்களைத் தயார்படுத்திக்கொடுத்தமை, அவரது உடல் எரிக்கப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று நபர்களைக் கைது செய்துள்ளதாக கோயம்புத்தூர் பொலிஸார் நேற்று உறுதிப்படுத்தினர்.

27 வயதுடைய அமானி தான்ஜி, சட்டத்தரணியான 36 வயதுடைய சிவகாமி சுந்தரி, எஸ். தியாகேஷ்வரன் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொலிஸார் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அவரது மரணம் தொடர்பாக தற்போதைக்கு நடத்திச்செல்லப்படும் வழக்குகள் சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவர் உயிரிழந்தார் என்பதை உறுதிப்படுத்தும் தகவல்கள் எமக்கு கிடைக்க வேண்டும். அவை கிடைத்த பின்னரே நாம் விடயங்களை சமர்ப்பிக்க முடியும். அவர் உயிரிழந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், அதனை நாம் நீதிமன்றத்தில் அறிவிப்பதானால் உறுதிப்படுத்தக்கூடிய சாட்சி ஆதாரங்களை நாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆதாரங்கள் எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவ்வாறு உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்களைப் பெறுவதற்கு அரச மட்டத்தில் நடவடிக்கை எடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்

என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்