by Staff Writer 03-08-2020 | 7:47 PM
Colombo (News 1st) பாதாள உலகக்குழு தலைவர் என அறியப்படும் 'அங்கொட லொக்கா' உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அவரின் உயிரிழப்பு தொடர்பில் பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் கோயம்புத்தூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள உலகக்குழு தலைவராக அறியப்படும் அங்கொட லொக்கா என்றழைக்கப்படும் லசந்த சந்தன பெரேரா இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சில செய்தி வௌியிட்டுள்ளன.
பிரதீப் சிங் என்ற அடையாளத்தில் 2 வருடங்களாக இந்தியாவின் கோயம்புத்தூரில் அங்கொட லொக்கா வசித்து வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லசந்த சந்தன பெரேரா அல்லது அங்கொட லொக்கா தொடர்பில் த ஹிந்து, Times of India, The New Indian Express ஆகிய தமிழ்நாட்டு பத்திரிகைகள் செய்தி வௌியிட்டுள்ளன.
அங்கொட லொக்காவிற்கு போலி ஆதார் அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்துக் கொடுத்தமை மற்றும் சடலத்தை எரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
27 வயதான அமானி தான்ஜி, 36 வயதான சட்டத்தரணி சிவகாமி சுந்தரி மற்றும் எஸ். தியாகேஷ்வரன் ஆகிய மூவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் தியாகேஸ்வரனும் சிவகாமி சுந்தரி என்ற சட்டத்தரணியும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகஙகள் தெரிவித்துள்ளன.
27 வயதான அமானி தான்ஜி என்ற பெண் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்று கோயம்புத்தூர் - சேரன்மாநகரில் அங்கொட லொக்காவுடன் வசித்து வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி பிரதீப் சிங் என அடையாளத்தை கொண்டிருந்த 'அங்கொட லொக்கா' நெஞ்சுவலி காரணமாக கோயம்புத்தூரில் வைத்தியசாலையொன்றில் குறித்த பெண்ணால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மயக்க நிலையில் இருந்த அங்கொட லொக்கா அவ்வாறே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அதன் பின்னர் தான்ஜி மற்றும் சுந்தரி ஆகியோர் உயிரிழந்தவரின் உறவினர் என தெரிவித்து சடலத்தை வைத்தியசாலையில் இருந்து பெற்றுச்சென்று மதுரையில் தகனம் செய்துள்ளனர்.
எனினும் சடலத்தை புதைத்துள்ளதாக இவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
'அங்கொட லொக்கா' இந்தியாவில் உயிரிழந்ததாக முதலாவது செய்தி வெளியாகியதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் தமிழ்நாட்டு பொலிஸாருக்கு இலங்கை பொலிஸார் தௌிவுபடுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அதன் பின்னர் கோயம்புத்தூர் பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் அங்கொட லொக்காவின் சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தொடர்பில் உறுதிசெய்தனர்.
கொரோனா காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில் அங்கொட லொக்காவின் சடலத்தை கோயம்புத்தூரிலிருந்து 216 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மதுரை வரை கொண்டுசென்று தகனம் செய்துள்ளார்களா என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
இதனுடன் தமிழ்நாட்டு பாதாள உலக கோஷ்டிக்கும் தொடர்புள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.