அனுருந்த சம்பாயோ கைது

அனுருந்த சம்பாயோ கைது

by Staff Writer 02-08-2020 | 5:31 PM
Colombo (News 1st) பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருந்த சம்பாயோ, குருணாகலில் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதன்பின்னர் சந்தேக நபர் குற்றப்புலனாய்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்படுவார் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அனுருந்த சம்பாயோ உள்ளிட்ட சந்தேக நபர்கள் நால்வரை கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 22 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் அவர்களை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. போலி ஆவணங்களை தயாரித்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிக்கு குளிரூட்டி உள்ளிட்ட சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் அனுருத்த சம்பாயோவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிறைக்காவலர்கள் மூவரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் உத்தியோகப்பற்றற்ற நீதவான் சட்டத்தரணி இந்திக்க சில்வா உத்தரவிட்டார். இதற்கமைய நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையாற்றிய பிரதம சிறைக்காவலர் உபாலி சரத் பண்டார, இரண்டாம் நிலை சிறைக்காவலர் நிஷாந்த சேனாரத்ன மற்றும் சிறைக்காவலராக கடமையாற்றிய பிரசாத் காலிங்க களு அக்கல (Kalu - Aggala) உள்ளிட்ட அதிகாரிகள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.