ஜனாதிபதி, பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி, பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தி

by Staff Writer 01-08-2020 | 7:50 PM
Colombo (News 1st) COVID-19 தொற்று காரணமாக மக்காவிற்கு சென்று ஹஜ் கடமையில் ஈடுபட முடியாவிட்டாலும் அல்லாஹ்வின் கருணையைப் போற்றி சாந்தியும் சமாதானத்துடனும் வாழ இன்றைய நாள் உதவிபுரியும் என ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஸ தனது ஹஜ் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். ஹஜ் புனிதக் கடமையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள இலங்கை அரசாங்கம், முஸ்லிம்கள் தமது வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி விடுத்துள்ள ஹஜ் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித குர்ஆனின் படிப்பினைகளுக்கு அமைவாக தொன்றுதொட்டு சகல மதத்தவர்களுடனும் ஒன்றிணைந்திருக்கும் முஸ்லிம்கள் நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என நம்புவதாகவும் ஜனாதிபதி தனது ஹஜ் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மற்றும் பரிந்துரைகளைப் பின்பற்றி வீடுகளில் இருந்தவாறு ஹஜ்ஜை கொண்டாட வேண்டியுள்ளதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். உலகவாழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள கொரோனா தொற்று நிலைமை விரைவாக நீங்க வேண்டும் எனவும், அதனூடாக மக்களை பாதுகாத்துத் தருமாறும் இன்றைய ஹஜ் பிரார்த்தனையின் போது அல்லாஹ்விடம் மன்றாடுமாறு பிரதமர் தனது வாழ்த்தில் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, மக்களுக்கிடையில் கருணை, அன்பு போன்ற பிணைப்புகளின் மகிமை தொடர்பாக விரிவான எடுத்துக்காட்டாகவுள்ள ஹஜ் பெருநாளில் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மகிழ்ச்சியும் சமாதானமும் கிடைக்க பிரார்த்திப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹஜ் பெருநாளை முன்னிட்டு சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதநேயமும் தெய்வீகத்தன்மையும் இரண்டறக் கலந்த ஒன்றாக ஹஜ் உள்ளது என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.