பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை

by Staff Writer 31-07-2020 | 4:44 PM
Colombo (News 1st) இரத்தினபுரி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கஹவத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார பேரணி இடம்பெற்ற போது, ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்சன சில்வா மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயக்கொடி ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரியிலிருந்து 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிரேமலால் ஜயசேகர அந்த காலப்பகுதியில் மின்சக்தி மற்றும் எரிசக்தி, ரஜரட்ட அபிவிருத்தி பிரதி அமைச்சராக பொறுப்பு வகித்தார். அவர் கடந்த பாராளுமன்றத்திற்கு தெரிவானதுடன், இந்த முறை பொதுஜன பெரமுன சார்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுகிறார். 2015 ஜனவரி 5 ஆம் திகதி கஹவத்தை பிரதேசத்தில் அந்தக் கொலை இடம்பெற்றது. மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற ஏற்பாடாகியிருந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றுக்கான பந்தல் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர் ஒருவரே சம்பவத்தில் கொல்லப்பட்டார்.