by Staff Writer 31-07-2020 | 9:26 PM
Colombo (News 1st) சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்படாமை தொடர்பாக சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டது.
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதிகளின் பயன்பாட்டிற்காக பல்வேறு உபகரணங்களை வழங்குதல், விஷமமான செயற்பாடுகள் இடம்பெறல் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்தது.
அதற்கமைய, கடந்த 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்தனர்.
அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் நீதிமன்றம் நீர்கொழும்பு சிறைச்சாலையின் அதிகாரிகள் நால்வரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்தது.
நீர்கொழும்பு சிறைச்சாலையின் அத்தியட்சகராக பொறுப்பு வகித்த அநுருத்த சம்பாயோ, தலைமை சிறைச்சாலை அதிகாரி உபாலி சரத்சந்திர, பதில் சிறைச்சாலை அதிகாரி நிஷாந்த சேனாரத்ன, இரண்டாம் நிலை சிறைச்சாலை அதிகாரி பிரசாத் களுஅக்கல ஆகியோரைக் கைது செய்யும்படியே பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
எனினும், நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோ இதுவரை கைது செய்யப்படவில்லை.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் தலைமறைவாகி இருந்தால், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய விதம் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தௌிவுபடுத்தப்பட்டது.
சந்தேகநபர் தலைமறைவாகியோ அல்லது தப்பித்து சென்றிருந்தாலோ, அவரின் சொத்துக்களை கையகப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார்.