வடமராட்சியில் அத்துமீறி மீன்பிடி:தீர்ப்பு விரைவில்

வடமராட்சியில் வௌிமாவட்ட மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு விரைவில்

by Staff Writer 30-07-2020 | 5:13 PM
Colombo (News 1st) வடமராட்சி கடலில் வௌிமாவட்ட மீனவர்கள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு எதிரான வழக்கின் கட்டளையை எதிர்வரும் 4 ஆம் திகதி வௌியிடுவதாக பருத்தித்துறை நீதிமன்றம் இன்று அறிவித்தது. வௌிமாவட்ட மீனவர்கள் வடமராட்சி கடலில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதாகத் தெரிவித்து வடமராட்சி மீனவர் சங்க சமாசங்கள், சட்டத்தரணி தி.சந்திசேகரன் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் பிரகாரம், வௌிமாவட்ட மீனவர்களுக்கு இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்த பருத்தித்துறை நீதிமன்றம், அந்தத் தடையை இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை நீடித்து வந்தது. எனினும், தடையை அவ்வாறு நீடிக்கும் தேவை இனி இல்லை என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்த கூற்றுக்கு அமைவாக தடையை நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது. ஆனாலும், அதன் பின்னர் மீண்டும் வௌிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல்கள் ஆரம்பித்துள்ளதால், சமாசப் பிரதிநிதிகள் சட்டத்தரணி ஊடாக நகர்த்தல் பத்திரமொன்றை சமர்ப்பித்தனர். அந்த நகர்த்தல் பத்திரம் கடந்த 22 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, கடந்த 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. என்றாலும், அன்றைய தினம் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகாததால் வழக்கு இன்றைய திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. நீதவான் சைலவன் காயத்திரி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் சமாச பிரதிநிதிகள் சார்பில் சட்டத்தரணி தி.சந்திரசேகரனுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் ஆஜராகியிருந்தார். வழக்கின் கட்டளையை எதிர்வரும் 4 ஆம் திகதி அறிவிப்பதாக பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டார்.