நாத்தாண்டியா விபத்து: இளைஞருக்கு விளக்கமறியல்

பாதுகாப்பற்ற தேர்தல் பிரசாரம்: நாத்தாண்டியா விபத்துடன் தொடர்புடையவர் நீதிமன்றில் ஆஜர்

by Staff Writer 30-07-2020 | 8:19 PM
Colombo (News 1st) மோட்டார் சைக்கிள்களின் மூலம் பாதுகாப்பற்ற முறையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அதிகம் பேசுபொருளாகியுள்ளது. இவ்வாறான நிலையால், நாத்தாண்டியா பகுதியில் இளம் தம்பதியினர் விபத்தில் சிக்குண்டுள்ளனர். குறித்த தம்பதியினர் தற்போது தேசிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஞாயிறு காலை 10 மணிக்கு நாத்தாண்டியா பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. தல்ககபிட்டியவிலிருந்து முகத்துவாரம் நோக்கி சிறிய ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மீது நாத்தாண்டியா நோக்கி அதிக வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 450 CC வலு கொண்ட மோட்டார் சைக்கிள்களை நாட்டில் பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 26 வயதுடைய அஷேன் அவிஷ்க எனப்படும் இளைஞர் 5 நாட்களாக தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரின் மனைவி விபத்தில் காயமடைந்துள்ளார். இவர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். விபத்தினை ஏற்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு இன்று மாரவில நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். விபத்தினை ஏற்படுத்திய கட்சி ஒன்றின் ஆதரவாளரான குறித்த இளைஞர் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் சனத் நிஷாந்தவிடம் கேள்வி எழுப்பிய போது, அவ்விளைஞர் தமது இளைஞர் பேரணியில் கலந்துகொள்ள வருகை தந்தவரல்ல என பதிலளித்தார். எனினும், கடந்த நாட்களில் சனத் நிஷாந்த சேருகல , முத்துகட்டுவ , கல்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள்களில் பயணித்ததை அவதானிக்க முடிந்தது.