குற்றச்சாட்டு உள்ளவர்கள் மீது தொடர்ந்தும் விசாரணை

ஐ.தே.க உறுப்புரிமை நீக்கம்: அதிகக் குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மீது தொடர்ந்தும் விசாரணை இடம்பெறுவதாக தெரிவிப்பு

by Staff Writer 30-07-2020 | 9:16 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 115 பேரின் பெயர்கள் இன்று வௌியிடப்பட்டன. எனினும், வௌியிடப்பட்ட குறித்த பட்டியலில் சஜித் பிரேமதாசவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. ரஞ்சன் ராமநாயக்க , ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சட்டத்தரணி அஜித் பி. பெரேரா, இந்துநில் துஷார அமரசேன, நளின் பண்டார ஜயமக, அஷோக்க அபேசிங்க, சிட்னி ஜயரத்ன உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஏனையவர்கள் மீது ஒழுக்காற்று பரிசீலனை மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார். சிலர் மீது அதிகக் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் அவர்கள் மீது தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விரைவில் முடிவுகள் வௌியிடப்படும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று உயர் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் அந்த கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தலில் போட்டியிட அந்தக் கட்சிக்கு அனுமதி அளித்துள்ளதுடன், அதற்கான அனுமதிக் கடிதம் இரண்டு மொழிகளில் சமூக ஊடகங்களில் உலா வருவதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். சில நபர்கள் தம்முடன் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடல்களைப் பதிவு செய்து பின்னர் அவற்றை தொகுத்து வெளியிட்டுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.