54 பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ரணில் விளக்கம்

54 பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ரணில் விளக்கம்

54 பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ரணில் விளக்கம்

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2020 | 8:58 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (28) ரம்புக்கனையில் நடைபெற்ற கூட்டத்தில், 54 முன்னாள் உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைத் தாம் முன்னெடுத்துள்ளதாக இதன்போது ரணில் விக்ரசிங்க குறிப்பிட்டார்.

ஒழுக்காற்று விசாரணைகளின் போது கட்சியின் சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 54 பிரதேச சபை உறுப்பினர்களை நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் நீண்ட காலம் சிந்தித்து எடுக்கப்பட்டது எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த கட்சி பிடிக்கவில்லை என்றால் லலித் அத்துலத்முதலி செய்ததைப் போன்று வேறு கட்சி ஒன்றை உருவாக்கிக் கொண்டு அங்கு சென்று தேர்தலில் போட்டியிடுங்கள். என்னால் அதனை நிறுத்த முடியாது. கட்சியிலிருந்து விலகிச் செல்லுங்கள். அதனையே லலித் அத்துலத்முதலி செய்தார். எனவே, இவ்விடத்தில் இருந்து வெளியேறிச் சென்றவர்கள் அங்கு கட்சி ஒன்றை உருவாக்க வேண்டுமாக இருந்தால், அதனை செய்யுங்கள். தேவை என்றால் தாமரை மொட்டுடன் இணைந்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்யாமல் இவ்விடத்திற்கு வந்து நாமே ஐக்கிய தேசியக் கட்சி என்று கூறி எம்மை பாதிப்படையச் செய்ய வேண்டாம். அது செய்நன்றி அல்ல

என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, இறுதி வாரத்தில் ”ராஜபக்ஸ – விக்ரமசிங்க” சூழ்ச்சிப் போட்டிக்கு வந்துள்ளமை விளங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஒரு பக்கம் சஜித் பிரேமதாச மீதும் கட்சியின் மீதும் ராஜபக்ஸக்கள் பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நிலையில், மறுபக்கம் மக்களைப் பயமுறுத்தியாவது ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கவின் குழுவினர் செயற்படுவதாக ரஞ்சித் மத்தும பண்டார குற்றச்சாட்டு முன்வைத்தார்.

தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கும் போது கட்சியின் அங்கத்துவத்தை தடைசெய்து நீக்குகின்றனர். இந்த நாட்டில் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவரை விவாதித்தே நீக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியில் அந்த சிறு தரப்பினரின் பெயர்களைக் கூறுங்கள் என்று செயலாளரிடம் நாம் கேட்கின்றோம். சஜித் பிரேமதாச நீக்கப்பட்டுள்ளாரா? ஏனையவர்கள் நீக்கப்பட்டுள்ளார்களா? அவ்வாறு செய்யவில்லை. எமது பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நாம் சகல நடவடிக்கைகளையும் எடுப்போம். 60 பேரின் அங்கத்துவத்தையும் பாதுகாப்போம்

என அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்