சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தத் தயார்

வெற்றியீட்டும் உறுப்பினர்களின் சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தத் தயார்: தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

by Staff Writer 28-07-2020 | 6:01 PM
Colombo (News 1st) தமது கட்சி சார்பில் பொதுத்தேர்தலில் வெற்றியீட்டும் உறுப்பினர்களின் சொத்து விபரங்களைப் பகிரங்கப்படுத்தத் தயார் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் யாழ்ப்பாணம் கோவில் வீதியிலுள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூட்டணி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்க விரும்புவோர் தேர்தலின் பின்னர் முன் அனுமதியுடன் அவற்றைப் பார்வையிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் சொத்து விபரங்களை மாத்திரம் பகிரங்கப்படுத்துவதற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. வேட்பாளராக இருந்தபோது எவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தார் என்பதை அறிவதன் மூலம், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் முறைகேடாக சொத்து சேகரித்தாரா என்பதை அறிய முடியும் என கூட்டணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் தமது மாதாந்த படிகளின் 8 சதவீதத்தினை பொதுமக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்காக வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆகக் குறைந்தது 2 சதவீதத்தினை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுவான செலவீனங்களுக்காகவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.