ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் சிக்கல்

by Staff Writer 28-07-2020 | 9:12 PM
Colombo (News 1st) ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றில் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட ஒரு விடயத்திற்கு எதிராக மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்ய முடியுமா என இன்று சட்டப் பிரச்சினை ஏற்பட்டது. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே இந்த சிக்கல் நிலை ஏற்பட்டது. நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தித் திட்டம் மற்றும் நாட்குறிப்பு அச்சிடப்பட்டமை தொடர்பில் 2012 ஆம் ஆண்டு கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளராக செயற்பட்ட சந்தன பெல்பிட்ட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்த அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சந்தன பெல்பிட்ட முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். பாரிய ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தமக்கெதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு அரசியல் பழிவாங்கலாகும் என அந்த முறைப்பாட்டில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கொடுக்கல் வாங்கலுடன் தாம் தொடர்புபடவில்லை எனவும் ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சியங்களை முன்வைத்து தாம் பிரதிவாதியாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, தமக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாகவும் சந்தன பெல்பிட்ட குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விடயத்தை மீண்டும் அத்தகையவொரு ஆணைக்குழுவில் விசாரிப்பதற்கான இயலுமை தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உப்பாலி அபேரத்ன இதன்போது கூறியுள்ளார். இது தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரியவிற்கு ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு வௌியே பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவதைத் தடுக்கும் உத்தரவொன்றை ஜனாதிபதி ஆணைக்குழு இன்று பிறப்பித்தது. தேர்தல் காலப் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த செயற்பாடு காரணமாக தேர்தல் சட்டம் மீறப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். இதன் காரணமாக ஆணைக்குழு விசாரணை தொடர்பில் ஆணைக்குழுவிற்கு வௌியே கருத்து வௌியிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தினார். இதேவேளை, ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீரவின் முறைப்பாடு தொடர்பிலான மேலதிக விசாரணை ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைக்காக முன்னாள் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித்த சேனாரத்ன ஆகியோர் சார்பில் சட்டத்தரணி ஒருவரும் இன்று ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். முறைப்பாட்டின் பிரதிகளை ஆராய வேண்டியுள்ளதால், தேர்தலுக்கு பின்னரான திகதியொன்றை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆணைக்குழுவில் கோரிக்கை விடுத்தார்.