by Staff Writer 28-07-2020 | 4:03 PM
Colombo (News 1st) பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்பகிஷ்கரிப்பை நாளை காலை 7.30 முதல் கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர், சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் கடந்த 16 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்களால் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளை சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் தங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என அறிவித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
எனினும், இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபரால் சுகாதார அமைச்சிக்கு தௌிவூட்டல் வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலையீட்டுடன் இன்று முற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார்.
நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளை சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது குறித்து இன்றைய கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, தங்களின் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடத் தீர்மானித்ததாக அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.