ஜோர்தானில் இலங்கைப் பணியாளர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்: பல்வேறு தரப்பினர் கண்டனம்

ஜோர்தானில் இலங்கைப் பணியாளர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்: பல்வேறு தரப்பினர் கண்டனம்

ஜோர்தானில் இலங்கைப் பணியாளர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்: பல்வேறு தரப்பினர் கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2020 | 9:27 pm

Colombo (News 1st) கொரோனா காரணமாக தொழில்களை இழந்து ஜோர்தானில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை பணியாளர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர்.

இலங்கை தூதரக அதிகாரிகள் சிலர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கலைப்பதற்காகவே கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்தப்பட்டது.

ஜோர்தானில் அகல்காரா கெமல்வெகா தொழில்பேட்டையில் தொழில்களை இழந்துள்ள சுமார் 700 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தில் அந்நாட்டு பொலிஸார் நேற்று பிற்பகல் 4 மணியளவில் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

நான்கு மாதங்களுக்கு மேலாக நாடு திரும்புவதற்கு இவர்கள் கோரிக்கை விடுத்து வந்தாலும் அது தொடர்பில் தீர்மானிக்க கால அவகாசம் வழங்குமாறு தூதரக அதிகாரிகள் தொடர்ச்சியாக கூறியிருந்தனர்.

தீர்வு கிடைக்காததால் இந்த பணியாளர்கள் நேற்று அவர்கள் தொழில் செய்த இடத்தின் அதிகாரிகளை சந்தித்து தூதரக அதிகாரிகளையும் சந்திப்பதற்கு தீர்மானித்தனர்.

எவ்வாறாயினும், பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தாம் குறித்த இடத்திற்கு வருகை தருவதாக தூதரக அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

இதன் பிரகாரம், ஜோர்தானின் அம்மானிலுள்ள இலங்கை தூதரகத்தின் தொழில் பிரிவு அதிகாரிகள் மூவர் இலங்கை பணியாளர்களை சந்திப்பதற்கு சென்றிருந்தனர்.

தொழில்களை இழந்தவர்கள் ஆதங்கங்களை வௌிப்படுத்திக்கொண்டிருந்தபோது தமக்கு மயக்கம் வருவதாக தூதரக அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

தூதரகத்தில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் புறப்பட்டு சென்றவுடனேயே கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 20 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அந்த சந்தர்ப்பத்திலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

ஜோர்தானின் அல்காரா கெமல்வெகா தொழில் பேட்டையில் சேவையாற்றிய இவர்கள் கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி தொழில்களை இழந்தனர்.

ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதியின் பின்னர் அவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான திகதியொன்றை வழங்குவதாகக் கூறி தொழிற்சாலை உரிமையாளர்கள் தொழிலை இராஜினாமா செய்யுமாறு அறிவித்திருந்தனர்.

நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இந்த இலங்கையர்களுக்கு நான்கு மாதங்களாக எவ்வித கொடுப்பனவும் கிடைக்கவில்லை என்பதுடன், நாளாந்தம் இரண்டு வேளை உணவு மாத்திரமே கிடைத்துள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகம் இன்று அறிக்கையொன்றை விடுத்திருந்தது.

குறித்த பணியாளர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று சென்ற இலங்கை தூதரகத்தின் தொழில் பிரிவு அதிகாரிகள் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக பணயக் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தொழிற்சாலையின் நிலைமையை தணிப்பதற்காகவும் தூதரக அதிகாரிகளை விடுவிப்பதற்காகவும் ஜோர்தான் பொலிஸார் அழைக்கப்பட்டதாக தூதரகம் அறிவித்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி தூதரக அதிகாரிகள் குறித்த தொழிற்சாலையில் வைத்து உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதார பொருட்கள் அடங்கிய 375 பொதிகளை பகிர்ந்தளித்ததாகவும் தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அத்தகவல் பொய்யானது எனவும் ஐந்து மாதங்களின் பின்னரே பொருட்கள் கிடைத்ததாகவும் எவ்வித பணமும் கிடைக்கவில்லை எனவும் தொழிலை இழந்த இலங்கைப் பெண் ஒருவர் குறிப்பிட்டார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தரவுகளுக்கு அமைய, வௌிநாடுகளில் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களின் எண்ணிக்கை 1.2 மில்லியனாகும்.

கடந்த வருடத்தில் மாத்திரம் வெிநாடுகளில் தொழில்புரியும் ஊழியர்கள் ஏழு பில்லியன் டொலர் வருமானத்தை இலங்கைக்கு ஈட்டிக் கொடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்