பாடசாலை வேன்களுக்கு 6 மாத லீசிங் சலுகை

பாடசாலை வேன்களுக்கு 6 மாத லீசிங் சலுகை - குருணாகலில் ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 27-07-2020 | 8:07 PM
Colombo (News 1st) மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். குருணாகல் மாவட்டத்தின் பல இடங்களுக்கு விஜயம் செய்து பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார். மத்திய அதிவேக வீதியில் குருணாகல் வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மாவத்தகம பொது சந்தையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பபோது ஜனாதிபதி தெரிவித்தார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அகில இலங்கை மாவட்ட மட்ட போக்குவரத்து சேவையின் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஜனாதிபதி, பாடசாலை வேன்களில் லீசிங் கடனை மீள செலுத்துவதற்கு மேலும் 6 மாதங்கள் கால அவகாசம் வழங்க இணக்கம் தெரிவித்தார். நிதஹஸ்கம வித்யாதீப மற்றும் தேவாபொல குமர ஆகிய கல்லூரிகளின் மைதானங்களை புனர்நிர்மாணம் செய்து தருமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும்படி இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். மாவத்தகம தேசிய பாடசாலை உள்ளரங்கின் பெட்மின்டன் களம் மற்றும் கஹபத்வல பிரதேசத்தின் கள உத்தியோகத்தர்களுக்கு ''சேவை பகுதி'' கட்டடமொன்றை நிர்மாணிக்கவும் இன்று தீர்மானிக்கப்பட்டது. அதிபர்களினதும் மாணவர்களினதும் கோரிக்கைக்கு அமைவாக சேர். ஜோன் கொத்தலாவல மத்திய மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதாக தொடங்கஸ்லந்த பொது மைதானத்துக்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கூறினார். அங்கிருந்து தொடங்கஸ்லந்த ரிதீகம வாராந்த சந்தை பகுதியில் இரண்டு பகுதிகளிலும் திரண்டிருந்த மக்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். தொடங்கஸ்லந்த வாராந்த சந்தைத் தொகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் மக்கள் தாம் எதிர்நோக்கும் குறைபாடுகளை தெரிவித்தனர். சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கையின் விலை வீழ்ச்சி, போதைப்பொருள் பிரச்சினை, வீதி கட்டமைப்பின் குறைபாடுகள் என்பன அவற்றில் சிலவாகும்.
பாதாள உலகக் கோஷ்டியினர் உண்மையில் கடந்த 5 வருட காலப் பகுதியிலேயே அதிகரித்தனர். பாதாள உலகத்தையும் 2015 ஆம் ஆண்டளவில் பயங்கரவாதம் மாத்திரமல்ல பாதாள உலகத்தின் குடுகாரர்கள் நாட்டை விட்டு வௌியே ஆரம்பித்திருந்தார்கள். 2015 ஆம் ஆண்டின் பின்னர் தான் அவர்கள் வந்தார்கள். சில அரசியல்வாதிகள் தமது தேர்தல் செயற்பாடுகளுக்கு அவர்களை பயன்படுத்திக்கொள்வதற்காக வௌிநாடு சென்றவர்களை அழைத்துக் கொண்டார்கள். அந்த 5 வருடங்களாகக் காணப்பட்ட நிலைமை கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக வந்த பின்னர் அவரது விசேட வேலைத்திட்டத்தின் பிரகாரம் இன்று பாதாள உலகக் கோஷ்டி மற்றும் குடுவை தடுக்கும் வேலைத்திட்டங்களை விஸ்தரித்து இந்த நாட்டுப் பிள்ளைகளை குடுவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்
என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளார். அலவ்வ பிரதேச சபை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் பிரதமர் சகிதம் ஜனாதிபதி கலந்துகொண்டார். அலவ்வ நகரில் ரயில் வீதிக்கு மேலாக மேம்பாலமொன்றை நிர்மாணிப்பது உள்ளிட்ட யோசனைகள் அடங்கிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தினார். தம்பதெனிய வைத்தியசாலைக்கு சொந்தமான காணியில் தனியார் கட்டடமொன்றின் நிர்மாணம் மற்றும் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக பிரதேசவாசிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்கள். பொல்கஹவலை வீரகும்புர பிரதேச சபை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதியும், பிரமரும் பங்கேற்றனர். கடந்த 3 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஆரம்பமான ஜனாதிபதியின் தொடர் மக்கள் சந்திப்பு பயணம் பொலன்னறுவை, புத்தளம், கொழும்பு, மாத்தளை, பதுளை, கண்டி அம்பாறை, கேகாலை, இரத்திபுரி, நுவரெலியா, காலி, மாத்தறை, குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு இதுவரை பயணித்துள்ளார்.