அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு

குருணாகல் அரசவை கட்டடம் குறித்த விசாரணை அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு 

by Staff Writer 27-07-2020 | 2:31 PM
Colombo (News 1st) தகர்க்கப்பட்ட குருணாகல் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த கட்டடம் தொடர்பில் வட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கட்டடம் தகர்த்தப்பட்டமை தொடர்பில் குருணாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட சுமார் 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேலும் சிலரிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, நீதிமன்ற உத்தரவின் பிரகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தகர்க்கப்பட்ட கட்டடத்தை புனரமைக்கும் பணிகளும் தாமதப்படுத்தப்பட்டுள்ளன.