IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளி பொய்யான தகவல்களை வழங்கியதாக தெரியவந்துள்ளது

by Staff Writer 25-07-2020 | 10:19 PM
Colombo (News 1st) IDH வைத்தியசாலையில் இருந்து நேற்று (24) தப்பிச்சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளி, பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கருத்து தெரிவித்தார்.
நோயாளியிடம் விசாரணைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். விசாரணைகளின் போது அவர் வழங்கிய தகவல்கள் போலியானவை என்பதை வேறு விதமாக நாம் கண்டறிந்துள்ளோம். கண்டறியப்பட்ட தகவல்களுக்கு அமைய, சுகாதாரப் பிரிவினரின் அனுமதியைப் பெற்று மீண்டும் அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்க நாம் எண்ணியுள்ளோம். அவர் முதலில் கூறிய பயண மார்க்கத்தில் செல்லாது, வேறு மார்க்கத்தில் பயணித்ததாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது. இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய வைரஸ் தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் காணப்படும் வகையிலான தகவல்கள் பதிவாகவில்லை. எனினும், விசாரணைகள் முழுமையாக முடியாத காரணத்தினால், முழுமையான நிலைமை தொடர்பில் அறிவிக்க முடியாதுள்ளது. வீடொன்றில் இருந்து சைக்கிளை திருடிச் சென்றுள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது. வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற போது அணிந்திருந்த ஆடைகளை மாற்றி, வேறு ஆடைகளை திருடி அணிந்தமை தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன. அது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். அவர் பயணித்ததாகக் கண்டறியப்பட்டுள்ள அனைத்து வீதிகளிலும் சுகாதார பிரிவினரின் கண்காணிப்பின் கீழ, கிருமி ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
என ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார். மேலும், கொரோனா நோயாளர்களுக்கு பல வைத்தியசாலைகளில் தனியார் பாதுகாப்பு பிரிவினரின் ஊடாக பாதுகாப்புக் கடமைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அந்த அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி செயற்படுவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதாகவும் அவர் கூறினார்.