மஞ்சளை இறக்குமதி செய்யும் திட்டமில்லை

மஞ்சளை இறக்குமதி செய்யும் திட்டமில்லை

by Staff Writer 25-07-2020 | 4:47 PM
Colombo (News 1st) நாட்டில் மஞ்சளுக்கான பற்றாக்குறை நிலவினாலும் மஞ்சளை இறக்குமதி செய்வது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆரோக்கியம் குன்றிய மஞ்சளை இறக்குமதி செய்து அதனை உள்நாட்டு சந்தையில் விநியோகம் செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மியன்மார் மற்றும் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மஞ்சளுக்கும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சளுக்கும் இடையிலான ஆரோக்கியத்தன்மையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுவதாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலைமையின் கீழ், உள்நாட்டு மஞ்சள் செய்கையாளர்களுக்கான சந்தை வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் மஞ்சள் இறக்குமதி முன்னெடுக்கப்படாதென அவர் குறிப்பிட்டார். இதனிடையே, அனுமதியின்றி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, தற்போது சுங்கத்திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள மஞ்சள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட மாட்டாதென கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஞ்சளை நாட்டிலேயே உற்பத்தி செய்து நுகர்வை விஸ்தரிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி விவசாயத் திணைக்கத்திடமே உள்நாட்டு மஞ்சள் உற்பத்திக்கான பொறுப்பு காணப்படுகின்றது. இந்த நிலையில், நாட்டில் வருடமொன்றில் 8,000 மெட்ரிக் தொன் மஞ்சளுக்கான தேவை நிலவுவதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2023 ஆம் ஆண்டளவில் மஞ்சள் தேவையை நிவர்த்தி செய்ய முடியுமென திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பீ.ஹீன்கேந்த தெரிவித்துள்ளார்.