சிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது

சீனாவின் உளவாளியாக செயற்பட்டதாக சந்தேகம்: சிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது

by Bella Dalima 25-07-2020 | 4:39 PM
Colombo (News 1st) சீனாவின் உளவாளியாக செயற்பட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். Jun Wei Yeo எனும் குறித்த சிங்கப்பூர் பிரஜை அரசியல் ஆலோசகர் என்ற போர்வையில் பெற்றுக்கொண்ட தகவல்களை சீன உளவுப் பிரிவிற்கு வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சீன இராணுவத்துடன் இரகசிய தொடர்புகளைப் பேணி வந்த சீன ஆய்வாளர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீன இராணுவத்தின் அதிகாரிகள் என பொய்யுரைத்து, விசா மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டவர்கன் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த சீன பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் FBI-இனால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சென்.பிரான்சிஸ்கோவிலுள்ள சீன கன்சியூலேட் அலுவலகத்தில் தரித்திருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசா மோசடியில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இதனிடையே, சீன இராணுவத்துடன் இரகசியத் தொடர்புகளைப் பேணும் மாணவர்கள் தொடர்பில் அமெரிக்காவின் 25 மாநிலங்களில் FBI நேர்காணல்களை முன்னெடுத்துள்ளது. சீன இராணுவ உறுப்பினர்கள், சீன இராணுவத்துடனான தொடர்பை மறைத்து அமெரிக்காவில் ஆய்வு விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான உதவி சட்ட மா அதிபர் John C Demers தெரிவித்துள்ளார். இதனிடையே, ஹூஸ்டனிலுள்ள சீன கொன்சியூலேட் அலுவலகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், சீனா Chengdu நகரிலுள்ள அமெரிக்க கொன்சியூலேட் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.