குருநாகல் புராதன கட்டடத்தை புனரமைப்பதற்கான நிதியை தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்

by Staff Writer 25-07-2020 | 4:01 PM
Colombo (News 1st) குருநாகலில் தகர்க்கப்பட்ட புராதன கட்டடத்தை புனரமைப்பதற்கு தேவையான நிதியை சம்பவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் குருநாகல் நகர சபை என்பனவற்றுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார். குறித்த கட்டடத்தை புனரமைப்பதற்கான திட்டங்களை வகுக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், குருநாகலில் தகர்க்கப்பட்ட புராதனக் கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள் தற்காலிகமாகக் காலம் தாழ்த்தப்பட்டுள்ளதாக புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர குறிப்பிட்டார். குறித்த கட்டடத்திற்குள் நுழைவதைத் தடை செய்து, சட்ட மா அதிபர் திணைக்களத்தால் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். குருநாகலில் தகர்க்கப்பட்ட புராதன கட்டடத்தின் புனரமைப்பு பணிகளை நேற்று முதல் ஆரம்பிக்க அமைச்சினால் இதற்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்ற பின்னர் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.