உள்நாட்டு அரிசிக்கு சர்வதேச சந்தை வாய்ப்பு

உள்நாட்டு அரிசியை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர்

by Staff Writer 25-07-2020 | 3:22 PM
Colombo (News 1st) உள்நாட்டு அரிசியை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பதுளை - கலஉடகந்தே கெதர பகுதியில் நேற்று (24) நடைபெற்ற சந்திப்பின் போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்துறையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக விளைச்சலை பெற்றுக்கொடுத்து, உள்நாட்டு சந்தை போன்று சர்வதேச சந்தையையும் வெற்றிகொள்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது கூறியுள்ளார். விவசாயத்துறையில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். தமது அரசாங்கத்தின் கீழ் எப்போதும் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், 2015 ஆம் ஆண்டு தமது அரசாங்கம் தோல்வியடையும் போது மத்தளை விமான நிலையத்தை நெல்லினால் நிரப்பும் அளவிற்கு நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையில் விசேட திட்டங்கள் பல முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.