தொல்பொருள் கட்டளை சட்டத்தை மறுசீரமைப்பது குறித்து ஜனாதிபதி கவனம்

தொல்பொருள் கட்டளை சட்டத்தை மறுசீரமைப்பது குறித்து ஜனாதிபதி கவனம்

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2020 | 10:10 pm

Colombo (News 1st) தொல்பொருட்களைப் பேணி மரபுரிமையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொல்பொருள் கட்டளை சட்டத்தை மறுசீரமைப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கவனம் செலுத்தியுள்ளார்.

இதற்காக மகா சங்கத்தினர் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

ஜனாதிபதி பௌத்த ஆலோசனை சபையின் நான்காம் கட்ட அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டதாகவும், அவற்றை சேதப்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்திக் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொல்பொருள் மற்றும் வரலாற்றுத் தொன்மை, மரபுரிமைகளை பாதுகாத்துத் தரும்படி விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உடனடி பதிலை அளிக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் தொல்பொருட்களை பேணிப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்திற்கு சிவில் பாதுகாப்புப் படையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் இயலுமை தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சம்பந்தமாக நடைபெறும் வழக்குகளை கொழும்பு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதற்கு உடனடியாக பதிலளிக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காலனித்துவ ஆட்சியின் போதும் பிற்காலத்திலும் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தொல்பொருட்களை UNESCO-வுடன் கலந்துரையாடி திருப்பிக் கொண்டுவரவும் மகா சங்கத்தினர் இதன்போது யோசனை முன்வைத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்