சட்டத்திற்கு முரணான சுற்றுநிரூபம்: அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிப்பு

சட்டத்திற்கு முரணான சுற்றுநிரூபம்: அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2020 | 10:26 pm

Colombo (News 1st) பொதுத் தேர்தலுக்கான கொரோனா தடுப்பு தொழில்நுட்பக் குழு இன்று தேர்தல் ஆணையத்தில் ஒன்றுகூடியது.

தொழில்நுட்பக் குழு பங்கேற்றதன் பின்னர் அதன் உறுப்பினரும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கொழும்பு மாவட்ட தலைவருமான வஜிர தசநாயக்க ஊடகங்களிடம் கருத்து வௌியிட்டார்.

இதன்போது, தேர்தல் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக பொது சுகாதார பரிசோதகர்கள், தேர்தல் ஆணையாளருக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக வஜிர தசநாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை, சுகாதார அமைச்சு மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள சட்ட ரீதியான அதிகாரங்கள் தொடர்பான முரண்பாடு அடுத்த வாரமளவில் நிவர்த்திக்கப்படும் என தாம் நினைப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை, பொது சுகாதார பரிசோதகர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, சிலாபம் நகர மத்தியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

வௌியிடப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தமது தொழிலுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர்.

பொது சுகாதார பரிசோதகர்களின் பகிஷ்கரிப்பு தொடர்பாக சுகாதார அமைச்சரிடம் வினவுவதற்கு பல தடவைகள் முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

தேர்தல் காலத்தில் COVID-19 தடுப்பிற்காக பொது சுகாதார ஊழியர்களுக்கு ஆலோசனைகளை உள்ளடக்கி சட்டமூலமாக்கி வௌியிடப்பட்ட சுற்றுநிரூபம் சட்டத்திற்கு முரணானது.

சட்டத்தின் பிரகாரம் குறித்த அதிகாரம் பொது சுகாதார பரிசோதகர்களுக்கே கிடைக்க வேண்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்