சந்தைகளில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு

மஞ்சளுக்கு தட்டுப்பாடு: அதிக விலைக்கு விற்போருக்கு எதிராக வழக்குத்தாக்கல்

by Staff Writer 24-07-2020 | 3:51 PM
Colombo (News 1st) மஞ்சளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த காலங்களில் அதிக விலைக்கேனும் மஞ்சளைக் கொள்வனவு செய்வதற்கான இயலுமை இருந்த போதிலும், தற்போது சந்தைகளில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு காணப்படுதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்து அரசினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பின்னரே மஞ்சளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. 01 கிலோகிராம் மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 750 ரூபா நிர்ணயிக்கப்பட்டது. இதேவேளை, உரிய அனுமதிப்பத்திரமின்றி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் அடங்கிய 62 கொள்கலன்கள் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இதில் அடங்கியுள்ள மஞ்சள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என சுங்க ஊடகப்பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதனிடையே, மஞ்சளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், அதிக விலைக்கு மஞ்சளை விற்பனை செய்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, பல்வேறு பொருட்களைக் கலந்து மஞ்சள் தூளாக விற்பனை செய்யும் நடவடிக்கைகளும் சிலரால் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.