குருநாகல் புராதன கட்டடத்தின் புனரமைப்பு செலவைப் பொறுப்பேற்பது யார்?

குருநாகல் புராதன கட்டடத்தின் புனரமைப்பு செலவைப் பொறுப்பேற்பது யார்?

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2020 | 8:20 pm

Colombo (News 1st) இடிக்கப்பட்ட குருநாகல் புராதன கட்டடத்தின் புனர் நிர்மாணத்தை தற்காலிகமாக பிற்போடுவதற்கு புத்தசாசன கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

நேற்று (23) வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இடிக்கப்பட்ட தொல்பொருள் பெறுமதி மிக்க சொத்துக்களை புனரமைக்கும் பணிகளை இன்று முதல் மீள ஆரம்பிக்குமாறு ஏற்கனவே அமைச்சு தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தது.

எனினும், அந்த இடத்திற்குள் நுழைவதை தடுத்து நீதிமன்றம் நேற்று விதித்த உத்தரவை கருத்திற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் துரிதமாக புனரமைப்பு நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அமைச்சின் செயலாளர் எம்.கே. பந்துல தெரிவித்துள்ளார்.

புனர் நிர்மாணப் பணிகளில் இராணுவத்தையும் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அவ்வாறெனின், புனரமைப்பு செலவைப் பொறுப்பேற்பது யார் ?

இது தொடர்பில் புத்த சாசன கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.கே. பந்துலவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

வடமேல் மாகாண சபை, குருநாகல் நகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் புத்த சாசன கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சு என்பனவற்றின் ஒத்துழைப்பு இதற்கு பெற்றுக்கொள்ளப்படுமென அவர் தெரிவித்தார்.

கட்டடம் இடிக்கப்பட்டமைக்கு பொறுப்பானவர்கள் அதற்குரிய செலவை ஏற்க ​வேண்டும் என இந்த விடயத்தை ஆராய்ந்து பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பித்த குழு பரிந்துரை செய்திருந்தது.

ஆனால், இப்போது அதற்கான செலவை நிறுவன ரீதியாக ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் என புலப்படுகின்றது.

அழிக்கப்பட்ட தொல்பொருட்களின் மீள் புனரமைப்பிற்காக மக்களின் வரிப் பணம் மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டுமா?

செலவை வசூலிப்பது எவ்வாறு என்பது தொடர்பில் குழுவின் தெளிவான பரிந்துரை இருந்தபோதிலும், அவ்வாறு செய்வதற்குப் பதிலாக பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி புனரமைப்பது ஏற்புடையதா?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்