கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டாம்: துறைமுக ஊழியர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டாம்: துறைமுக ஊழியர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2020 | 8:43 pm

Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திடம் குத்தகைக்கு வழங்கும் யோசனைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் இன்று ஒன்றிணைந்த எதிர்ப்புகளில் ஈடுபட்டன.

அவர்கள் தமது கோரிக்கையை ஜனாதிபதி செயலகத்திடம் கையளித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையை அடிப்படையாகக் கொண்டு இந்த எதிர்ப்பு நடவடிக்கை இன்று பகல் 12.20 அளவில் ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பேரணியாக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றன.

பேரணியினால் லோட்டஸ் சுற்றுவட்டத்தை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தின் முன்பாகச் சென்ற 23 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி செயலகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னர் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வௌியேறினர்.

கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி வர்த்தகக் கூட்டு நிறுவனத்திடம் குத்தகைக்கு வழங்க வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனூடாகக் கிடைக்கும் பணத்தில் துறைமுக அதிகார சபையின் கடனை செலுத்த முடியும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கு முன்னர் இந்தியா, ஜப்பான், இலங்கை என்பன ஒன்றிணைந்த செயற்றிட்டமாக கிழக்கு முனையத்தை மேம்படுத்த வேண்டும் என சாகல ரத்நாயக்க எழுத்துமூல இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்