ஏப்ரல் 21 தாக்குதல்: முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் P. B.அபேகோன் ஆணைக்குழுவில் சாட்சியம்

ஏப்ரல் 21 தாக்குதல்: முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் P. B.அபேகோன் ஆணைக்குழுவில் சாட்சியம்

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2020 | 9:39 pm

Colombo (News 1st) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு தலைமையிலான பிரிவினைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 94 பேரின் பெயர்கள் அடங்கிய அறிக்கையொன்று அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரால் அப்போதைய பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டதாக அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று (23) தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்து அவர் இதனைக் கூறினார்.

குறித்த அறிக்கையை 2017 ஒக்டோபர் 31 ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியதாக அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் நேற்று சாட்சியமளித்த போது தெரவித்தார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நபர்களில் தற்கொலை குண்டுதாக்குதலின் பிரதான சந்தேகநபர்களான நௌஃபர் மௌலவி, சஹரான் ஹாசிம் மற்றும் அவருக்கு நெருங்கிய சிலரின் பெயர்கள் உள்ளடங்கியிருந்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த 94 பேரில் சுமார் 80 வீதமானோர் தற்போதைக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சஹரானின் பிரிவினைவாத செயற்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதல்கள் தொடர்பாக 2017 ஆம் ஆண்டு அப்போதைய பொலிஸ் மா அதிபருக்கு, அரச புலானாய்வுப் பிரிவுத் தலைவருக்கு, பாதுகாப்புச் செயலாளருக்கு, சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார ஆகிய இருவருக்கும் அறிக்கையினூடாக அறிவித்திருந்ததாக அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்து குறிப்பிட்டார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரான P. B.அபேகோன் இன்று ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தார்.

மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உள்ளிட்ட சகலரும் வாராந்தம் கூடும் பாதுகாப்பு சபையை மாதத்திற்கு ஒரு தடவை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அவர் விசாரணை ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

அவர்கள் அவ்வாறு தீர்மானித்தாலும் அடுத்த கூட்டம் நடைபெறும் உறுதியான திகதி அறிவிக்கப்படவில்லை என்றும் முன்னாள் செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

ஜனாதிபதி திகதியை நிர்ணயித்தாலும் அந்த நாளில் கூட்டம் நடைபெறாமல் இருந்த சந்தர்ப்பங்களும் உள்ளதாக முன்னாள் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்