by Staff Writer 23-07-2020 | 8:20 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று காலியில் மக்களை சந்தித்தார்.
ஹினுதும தொகுதிக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன வேட்பாளர் சம்பத் அத்துகோரல ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.
நெலுவ தேசிய பாடசாலைக்கு சென்ற ஜனாதிபதி, அங்குள்ள குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்டார்.
சிறு ஏற்றுமதி பயிர் செய்கையில் ஈடுபடுவோர் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தினர்.
முள்ளுத்தேங்காய் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்குமாறு இதன்போது ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கலால் அதிகாரிகளின் சுற்றிவளைப்பினால் பாதிக்கப்பட்டுள்ள கித்துல் செய்கையை மீண்டும் மேற்கொள்வதற்கான பின்புலத்தை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மக்களுக்கு உறுதி வழங்கினார்.
ஒன்பது வயதான பிள்ளையொன்று உண்டியலில் சேமித்த பணத்தை இதன்போது COVID நிதியத்திற்காக ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
வேட்பாளர் இசுரு தொடங்கொட ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குமாறு மக்கள் இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
அரசாங்கம் தற்போது போதைப்பொருள் கடத்தற்காரர்களைக் கைது செய்து வருவதாகவும் அதற்கான செயலணியொன்றை உருவாக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறும் ஜனாதிபதி இதன்போது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
காலி மாவட்டத்தின் அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு இதன்போது ஜனாதிபதி உறுதி வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இதேவேளை, முன்னரை விட மக்கள் இம்முறை ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என வேட்பாளர் கீதா குமாரசிங்க பெந்தரையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.