சிங்கள பேரினவாதம் மீண்டும் திரட்சி பெற்றுள்ளது

சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் திரட்சி பெற்றுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை

by Staff Writer 23-07-2020 | 9:18 PM
Colombo (News 1st) இலங்கைத் தீவின் வரலாற்றில் தமிழர்களின் செங்குருதிக் கறைபடிந்த நாட்களில் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் நாள் முக்கியமானது என நீதியரசரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜூலை கலவரம் தொடர்பில் வௌியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தியுள்ளார். 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்யப்பட்டதாக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கில் எஞ்சியிருந்த தமிழர்கள், வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்திற்கு விரட்டப்பட்டதாகவும் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான மிலேச்சத்தனமான அடக்குமுறையே முழு அளவிலான ஆயுதப் போராட்டத்திற்கு இளைஞர்களை நிர்பந்தித்ததுடன், வடக்கு, கிழக்கில் நிழல் அரசை உருவாக்க வழிகோலியதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி தெரிவிற்காக கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலினூடாக சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் திரட்சி பெற்றுள்ளதாகவும் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இலங்கை அரசுடனோ அல்லது இலங்கைக்குள்ளோ பேசுவதால் உரிமையை என்றுமே பெற்றுவிட முடியாது என்பதை வரலாறு எடுத்துரைத்துள்ளதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையின் பரிகார நீதியூடாகவே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு நேர்மை, விலைபோகாத தலைமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் நிறுவன ரீதியான செயற்பாடுகள் அவசியம் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதற்கான அடித்தளத்தை இடுதல் தங்களின் எதிர்கால செயற்பாடுகளில் முக்கியமான ஒன்றாகக் காணப்படும் எனவும், அதற்கான முழுமையான ஒத்துழைப்பை நிலத்திலும், புலத்திலும் உள்ள மக்களிடம் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், எதிர்கால சந்ததியினர் வளமான , பாதுகாப்பான வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் தம்மைத் தாமே ஆளும் உரிமைகளுடன் வாழ அர்ப்பணிப்புடன் செயலாற்ற உறுதி பூணுவதாகவும் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.