இலங்கை போக்குவரத்து சபை வருமானத்தில் வீழ்ச்சி

இலங்கை போக்குவரத்து சபை வருமானத்தில் வீழ்ச்சி

by Staff Writer 23-07-2020 | 7:39 AM
Colombo (News 1st) தற்போதைய நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் நிலையேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் பொதுப் போக்குவரத்து பயன்பாடு குறைவடைந்துள்ளமையே இதற்கான காரணம் என சபையின் பிரதிப் பொதுமுகாமையாளர் A.H. பண்டுக்க தெரிவித்துள்ளார். கொரோனா நிலைமையைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 20 மில்லியனினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதற்கு முன்னர் சாதாரணமாக நாளொன்றுக்கு 75 - 85 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டு வந்ததாகவும் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தமது தேவைகளுக்காக சொந்த வாகனங்களை பயன்படுத்தும் வீதம் அதிகரித்துள்ளமை, வருவாயில் நேரடியாக தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதனால் எதிர்காலத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தற்போது ஊதியம் வழமைபோன்று வழங்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதனிடையே, தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு மாற்றுவருமான வழியை கையாள இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.