குருநாகலில் வேட்பாளரின் வாகனம் மீது தாக்குதல்; கேகாலையில் குடியிருப்புகளுக்கு கல்வீச்சு

குருநாகலில் வேட்பாளரின் வாகனம் மீது தாக்குதல்; கேகாலையில் குடியிருப்புகளுக்கு கல்வீச்சு

குருநாகலில் வேட்பாளரின் வாகனம் மீது தாக்குதல்; கேகாலையில் குடியிருப்புகளுக்கு கல்வீச்சு

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2020 | 10:39 pm

Colombo (News 1st) பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதனுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

குருநாகலில் வேட்பாளர் ஒருவரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள அதேவேளை, கேகாலை – தெஹியோவிட்ட, மாஓய தோட்ட மக்கள் தமக்கெதிரான வன்முறைகளுக்கு நீதி கோரி இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் புதுமுக வேட்பாளரான முஹம்மது நசீரின் வாகனத்தின் மீது குருநாகலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குருநாகல் – மல்லவபிட்டிய பகுதியில் நேற்று (22) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின் பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இரவு 9.30 அளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் வேட்பாளரின் வாகனம் சேதமடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தாக்குதல் தொடர்பாக வேட்பாளரான முஹம்மது நசீர் குருணாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, கேகாலை – தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாஓய தோட்ட மக்களின் குடியிருப்புகள் மீது கடந்த 19 ஆம் திகதி இரவு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தோட்டத் தலைவரின் வீட்டில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் கலந்துகொள்ளாமையின் காரணமாகவே குடியிருப்புகளின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பலனில்லை என தெரிவித்த மக்கள் நேற்று பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்றிரவும் தமது குடியிருப்புகள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் இரவு முழுவதும் பிள்ளைகளுடன் வீதியில் இருந்ததாகவும் மாஓய தோட்ட மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதன் பின்னணியில், மாஓய தோட்ட மக்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்