இலங்கைக்கு கழிவுக் கொள்கலன்களை அனுப்பிய நிறுவனத்திடம் இங்கிலாந்து அரசு விசாரணை

இலங்கைக்கு கழிவுக் கொள்கலன்களை அனுப்பிய நிறுவனத்திடம் இங்கிலாந்து அரசு விசாரணை

இலங்கைக்கு கழிவுக் கொள்கலன்களை அனுப்பிய நிறுவனத்திடம் இங்கிலாந்து அரசு விசாரணை

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2020 | 5:20 pm

Colombo (News 1st) தமது நாட்டின் சுற்றாடல் மற்றும் சுகாதார சட்டங்களை மீறி இலங்கைக்கு கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றுமதி செய்த இங்கிலாந்து நிறுவனத்திடம் அந்நாட்டு அரசு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சட்ட மா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் வென்க டீ உதுராமனிடம் இங்கிலாந்து சுற்றாடல் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளரின் சகோதரரால் கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி சாரூக ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

இங்கிலாந்தில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட குப்பை கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி கூறியுள்ளார்.

குப்பை இறக்குமதிக்கு எதிராக சுற்றாடல் நீதிக்கான மையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த விதானகே ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தொடர்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி மன்றில் இன்று தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி A.H.M.D. நவாஸ் மற்றும் நீதிபதி சோபித்த ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்